8/17/08

பாரதியின் வாழ்க்கைச் சம்பவம்.



வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்று வாழாத பாரதிக்கு ஒருமுறை செட்டியார் ஒருவர் ஒரு ராஜ அங்கவஸ்தரமும், சீமை மேலங்கி (கோட்டும்) வாங்கி கொடுத்தார்.. அதை கொடுத்து ”பாரதி இது உங்களுக்காக நான் விஷேசமாக வாங்கி வந்தது..நீங்கள் அதை போட்டு வர வேண்டும்” என்றார். பாரதி அதை அணிந்து கொண்டு எப்போதும் போல கம்பீரமாக தெருவில் நடந்து செல்கிறார். அப்போது அங்கே வரும் ரிக்சா தொழிலாளி “ என்னா சாமி கோட்டு புதுசா..” என்று கேட்க, பாரதி அவனை பார்த்து “ வாடா பாண்டியா.. (அவர் எல்லோரையும் இப்படி அழைப்பது வழக்கம்..அதாவது எல்லோரும் பாண்டிய மன்னர்கள்..) இந்தா மேலாடையை நீயே வைத்துக்கொள்..” என்று கொடுத்துவிட்டார். வாங்கித் தந்த செட்டியாருக்கு ஏக கடுப்பு..” என்ன பாரதி இப்படி பண்ணிவிட்டீரே..:”என்றதுக்கு..பாரதி “எனக்கு தர நீவீர் உள்ளீர்.. அவனுக்கு தர என்னை விட்டால் யார் இருக்கிறார்..” என்றார்..

வாங்கி தருவது யாசகப் பொருளாக இருந்தாலும் அதை கொடுக்கும் போது யாசகம் வாங்குபவனைக் கூட மன்னனாய் பார்க்கும் பார்வை என் பாரதியை தவிர வேரு யாருக்கு வரும்...



வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
:
:
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
:
:
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.


3 comments:

ramesh sadasivam said...

எப்பேர்ப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது நாமெல்லாம் வெறும் குப்பை என்று தோன்றுகிறது. பாரதியின் அன்பும்-அறிவும்-ஞானமும்-வீரமும் கவித்திறனும் - பாரதி ஒரு யுக புருஷன். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ முடியாமல் போனது நமது துரதிஷ்டம். அவரை பற்றி சொல்ல ஆட்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்.

தமிழ் பொறுக்கி said...

கருத்து சொன்னமைக்கு நன்றி மலர்கள்..
பாரதி பற்றி இரு வரிகளில் சொல்லனும்னா..

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்- என்னென்று சொல்வேன்

என்ற பாவேந்தர் சிந்தனையால் தான் முடியும்..

ramesh sadasivam said...

வேலைப் பளு அதிகமோ? :)